புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை தொடர்பு கொண்ட அமெரிக்க தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அமெரிக்க அரசின் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்றுமுன் தினம் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட ஜெய்ஷ் – இ- முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் சார்பாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானை கண்டிக்கும் விதமாக அந்த அந்நாட்டை ‘மிகவும் விரும்பத்தக்க நாடு’ என்ற அந்தஸ்தை நீக்கியது. மேலும், பாகிஸ்தானில் இருந்து இறக்கும்மதி செய்யப்படும் பொருட்களுக்கு 200சதவிகிதம் வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்துடன் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்காக அண்டை நாடுகளின் தூதரக அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்க அரசின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, “தனது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் உரிமையில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜான் போல்டன், “பாகிஸ்தான் தங்கள் நாட்டின் எல்லைக்குள் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.