டெஹ்ரான்: எண்ணெய் தடை என்பது ஒரு ஆயுதமாக அமெரிக்காவால் பயன்படுத்தப்படுகிறது என்று விமர்சித்துள்ள ஈரான் நாட்டு எண்ணெய் வள அமைச்சர், இதனால் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பிற்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.

ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும், இந்த வாரத்துடன் நிறைவடைகின்ற நிலையில், கடந்த சில நாட்களாக எண்ணெய் விலை அதிக ஏற்றத்தை சந்தித்துள்ளது. மேலும், இதனால் உலகளாவிய எண்ணெய் பகிர்மான விகிதமும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள இதே தடைதான், மற்றொரு முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நாடான வெனிசுலாவிற்கும் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் வெனிசுலா ஆகிய இரண்டு நாடுகளுமே, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பை நிறுவியதில் மிகவும் முக்கியப் பங்கை வகித்த நாடுகள். இந்த இக்கட்டான சூழலில்தான், ஈரான் அமைச்சரின் இந்த விமர்சனம் வெளிவந்துள்ளது.