வாஷிங்டன்: பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை, இந்தியா சுட்டு வீழ்த்தியது என்ற தகவல் பொய்யானது என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலவாமா தாக்குதலையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே சில வான்வழி மோதல்கள் நடைபெற்றன. அப்போது, பாகிஸ்தானிலுள்ள பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி, 300 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டதாக பாரதீய ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர, பாகிஸ்தானின் எஃப்-16 வகை போர்விமானங்களில் ஒன்றையும், இந்தியா தரப்பில் சுட்டு வீழ்த்தியுள்ளோம் என்றும் சொல்லப்பட்டு, இந்த இரண்டு விஷயங்களையுமே, பாரதீய ஜனதா கட்சியினர் தொடர்ந்து தேர்தல் அரசியலாக்கினர்.

ஆனால், இந்திய விமானப்படை தாக்குதலில், அப்படி யாரும் கொல்லப்பட்டதான தடயங்கள் கிடைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தரப்பில் மறுக்கப்பட்டன.

தீவிரவாதிகளின் மரணம் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது, இந்தியா தரப்பில் கூறப்படும் எஃப்-16 ரக விமான அழிப்பும் மறுக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பயணம் செய்த மிக்-21 ரக போர்விமானம், பாகிஸ்தான் ஏவுகணையால் தாக்கப்படுவதற்கு முன்னர், அபிநந்தன், எஃப்-16 விமானத்தை வீழ்த்தினார் என்று கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் வைத்திருக்கும் எஃப்-16 ரக விமானத்தில் எதுவும் குறையவில்லை என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிந்தன், பாகிஸ்தான் விமானத்தை தாக்கினார் என்று நம்புவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றாலும், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தரப்பில், பாகிஸ்தான் கைவசமுள்ள எஃப்-16 ரக விமானங்கள் சமீபத்தில் எண்ணப்பட்டபோது, எதுவும் குறையவில்லை என்பது தெரியவந்ததாக, அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்திய அதிகாரிகள் தரப்பில், உலக சமூகத்திற்கு தவறான தகவல்கள் பகிரப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அவர்கள்.

– மதுரை மாயாண்டி