ஜெனீவா:
பாலஸ்தீன நிலப்பகுதியில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேலுக்கு தடை விதித்து ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் இயற்றியுள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் நடுவே நீண்ட காலமாக மோதல் தொடர்கிறது.  பாலஸ்தீன பகுதியான கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட பல பகுதிகளில், வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை இஸ்ரேல் அமைத்து வருகிறது.
“இஸ்ரேலின்  இந்த  நடவடிக்கைகள் சட்டப்படி செல்லாது.  இனியும் இதுபோன்ற நடவடிக்கைகளை தொடரக்கூடாது.  இஸ்ரேல் நடவடிக்கை, சர்வதேச கொள்கைகளுக்கு எதிரானது” என்று வலியுறுத்தி, எகிப்து ஒரு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்திருந்தது.
இந்த தீர்மானத்தின் மீது நேற்று இரவு வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்ப்பு இன்றி 14-0 என்ற வாக்குகளில் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது.
இஸ்ரேலின் மிக நெருங்கிய நட்பு நாடு அமெரிக்கா. 2011ல் இதேபோன்ற தீர்மானம் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்டபோது இதே ஒபாமா தலைமையிலான அமெரிக்காதான், அதை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி வீழ்த்தியது. இப்போதும் இந்த தீர்மானத்திற்கு எதிராக தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அமெரிக்கா அப்படிச் செய்யவில்லை. ஆக்கிரமிப்பு குடியிருப்பு பாதுகாப்பு கவுன்சிலின் பிற உறுப்பு நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, 1967க்கு பிறகு பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் ஏற்படுத்திய குடியிருப்புகள் சட்ட அங்கீகாரத்தை இழக்கும் இனிமேல் புதிய குடியிருப்புகளை அமைக்க முடியாது.
ஐ.நா.சபை செயலாளர் பான் கீ மூன் இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ளார். இனிமேல் இஸ்ரேலும், பாலஸ்தீனமும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட இது வாய்ப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.