வாஷிங்டன்

மெரிக்காவின் விமானப்படை திவாலான ஒரு ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து இரண்டு விமானங்கள் வாங்கப்போவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

கடந்த 2013 ஆம் வருடம் ரஷ்யா நாட்டை சேர்ந்த டிரான்ஸ்ஏரோ நிறுவனம் இரண்டு ஜெட் விமானங்களை வாங்க ஆர்டர் செய்திருந்தது.  ஆனால் அதன் நிதி நிலைமை காரணமாக உடனடியாக அந்த விமானங்களை பறக்க விட முடியவில்லை.  2015ல் அந்த நிறுவனம் திவாலாகி விட்டது.

தற்போது அமெரிக்க விமானப்படை அந்த விமானங்களை வாங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  அந்த விமானத்தின் உட்புறம் விமானப்படையின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்படும் எனவும், ஒரு விமானம் அதிபரின் உபயோகத்துக்காகவும், மற்றொன்று அவசரத் தேவைகளுக்கு உபயோகப்படுத்தவும் வாங்கப்படுவதாக தெரிகிறது.

டிஃபன்ஸ் ஒன் என்னும் இணைய தளம் வெளியிட்ட தகவலின்படி இந்த இரு ஜெட் விமானங்களும், பரிசோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு வெகு நாட்களாக கலிஃபோர்னியா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

அங்குள்ள சீதோஷ்ண நிலையின் படி எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் விமானம் எந்த சேதமும் அடையாது.  எனவே அந்த விமானங்கள் புதிது போலவே காணப்படுகிறது.  இந்த விமானங்களின் விலை ஒவ்வொரு விமானமும் 390 மில்லியன் டாலர் என சொல்லப்படுகிறது.  பேரம் இன்னும் முடிவாகவில்லை எனவும் தெரிகின்றது.

இந்த விமானங்களை மாற்றி அமைக்க சுமார் 3.2 பில்லியன் டாலர் செலவாகும் என கூறப்படுகிறது.  அதே நேரத்தில் கால தாமதம் ஆனால் செலவு மேலும் கூடும் என தெரிய வருகிறது