சென்னை: தமிழ்நாட்டில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவபடையினரை அமர்த்தக்கோரி அவசர வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுமீது பிற்பகல் விசாரணைநடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில்,நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுமார் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, பாதுகாப்பை மீறி, பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவசங்கள் வரி வழங்கப்பட்டு வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோவையில் அப்பட்டமாக இலவச ஹாட்பாக்ஸ் விநியோகம் செய்யப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதன்மீது காவல்துறையினரும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்காத நிகழ்வுகள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.
இந்த நிலையில், தேர்தலை நியாயமாக நடத்தக்கோரியும், பாதுகாப்புக்கு துணை ராணுவப்படையினரை அமர்த்த உத்தரவிடக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் வாக்காளர்களுக்கு இலவசங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்மீது ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தும், காவல்துறையும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளதுது.
இந்த மனு ஏற்கத்தக்கதாக இருந்தால், பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.