சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நாளை கவுன்சிலர்களாக பதவி ஏற்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து 4ந்தேதி மேயர், துணைமேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்  நடைபெற்று முடிந்தது. அதன்படி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சி கள், 489 பேரூராட்சிகளில் உள்ள  12,602 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ந்தேதி எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

21 மாநகராட்சிகளில் உள்ள மொத்தம் வார்டுகள் 1374: இதில், 1373 இடங்களுக்கான முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  திமுக 952 வார்டுகளை கைப்பற்றி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 164, காங்கிரஸ் 73, மார்க்சிஸ்ட் 24, பாஜக 22, மதிமுக 21, விசிக 16, சிபிஐ 13, முஸ்லீம் லீக் 6, பாமக 5, அமமுக 3, எஸ்டிபிஐ 1 வெற்றி பெற்றுள்ளனர்.

138 நகராட்சிகளில் உள்ள மொத்தம் வார்டுகள் 3843: இதில், 3842 இடங்களுக்கான முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் திமுக 2360 இடங்களை கைப்பற்றி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 638, காங்கிரஸ் 151, பாஜக 56, பாமக 48, சிபிஎம் 41, மதிமுக 34, அமமுக 33, விசிக 26, முஸ்லீம் லீக் 23, சிபிஐ 19, தேமுதிக 12, எஸ்டிபிஐ 5, பகுஜன் சமாஜ் 3, மமக 4, ஐஜேகே 2 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

489 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் வார்டுகள் 7621: இதில் 7603 இடங்களுக்கான முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,  4,388 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக 1206,  காங்கிரஸ் 368,  பாஜக 230,  சிபிஎம் 101,  பாமக 73, அமமுக 66, விசிக 51, மதிமுக 34, சிபிஐ 26, தேமுதிக 23, எஸ்டிபிஐ 16, மமக 13, முஸ்லீம் லீக் 12, நாம் தமிழர் 6, புதிய தமிழகம் 3, மார்க்சிஸ்ட் (மா.லெ) 1, ஐஜேகே 1, என்சிபி 1, பகுஜன் சமாஜ் 1, மஜக 1, தமமுக 1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளை கவுன்சிலர்களாக பதவி ஏற்க உள்ளனர். இதையடுத்து,  மேயர், துணைமேயர் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மார்ச் 4ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது.

இவ்வாறு நடைபெறும் மறைமுக தேர்தல் மூலம் 21 மேயர்கள், 21 துணை மேயர்கள், 138 நகர் மன்ற தலைவர்கள், 138 நகர் மன்ற துணைத் தலைவர்கள், 490 பேரூராட்சி மன்றத் தலைவர்கள், 490 பேரூராட்சித் துணைத் தலைவர்கள் என 1,298 பதவிகளுக்கானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களில் இருந்து ஒருவரையே பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுபவர்களைத் தேர்வு செய்ய அந்த மறைமுகத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இதன் காரணமாக நாளை  கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நடைபெற உள்ளது.

நாளை காலை 9.30 மணி முதல் மாநகராட்சி ,நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே,தமிழகத்தில் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள மறைமுகத் தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]