சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வருகின்ற  9ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில்  உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, தேர்தலில் வெற்றிபெற்ற அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான தேதிகளை மாநில தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, திமுக, அதிமுக உள்பட அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள கட்சி நிர்வாகி களிடம் இருந்து விருப்பமனு பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வருகின்ற டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அவர்கள் தலைமை யில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சாதாரணத் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் அமைத்து தருதல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று (01.12.2021) பிற்பகல் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

உச்சநீதிமன்ற ஆணையின்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றிற்கு சாதாரணத் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல், உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி (Video-Conferencing) வாயிலாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ. பழனிகுமார் அவர்கள் தலைமையில் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர் களுடன் நேற்று (01.12.2021) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் 09.12.2021 அன்று வெளியிடப்படவுள்ளது, அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் நகல் வழங்குதல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல்நிலை சரிபார்ப்பு, தகவல் பதிவேற்றம் மற்றும் முடிவறிக்கை நிலை, மண்டல அலுவலர்கள் நியமனம், வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆன்லைன் தகவல் பதிவு செய்தல், முன்னேற்ற அறிக்கை, வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், கழிப்பறை வசதி, மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு சாய்தள நடைமேடை அமைத்தல் மற்றும் முதியோர்களுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்தல் குறித்து பேசப்பட்டது.

மேலும்,கொரோனா தடுப்பு மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திலிருந்து பெறுதல், விநியோகம் செய்தல் குறித்த பணிகள் மேற்கொள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் மற்றும் கொரோனா தடுப்பு மருந்துகளை இருப்பு வைக்க கிடங்கு வசதிக்கு இடம் தேர்வு செய்தல், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ! வாக்குப்பதிவு அலுவலர்கள் / வாக்கு எண்ணுகை அலுவலர்கள் / காவல் துறை அலுவலர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி போடுவதை உறுதி செய்யக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவினை நேரலையாக கண்காணித்தல் மற்றும் நுண் மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்தல் மற்றும் ஏனைய அனைத்து வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்துதல், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறி தல், வாக்கு எண்ணுகை மையங்களை இறுதி செய்தல், வாக்குப்பதிவு பொருட்களின் இருப்பினை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட தேர்தல் தொடர் பான கருத்துகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் திருமதி எ.சுந்தரவல்லி ,பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர் ஆர். செல்வராஜ்,நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு பா. பொன்னையா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) திரு விசுமகாஜன்,முதன்மை தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்) திருமதி கு, தனலட்சுமி, முதன்மை தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்) திரு கி.அ. சுப்பிரமணியம், உதவி ஆணையர் (தேர்தல்) திரு அகஸ்ரீ சம்பத்குமார், மற்றும் ஆணையத்தின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.