சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் நாட்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, பிப்ரவரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22ந்தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுகள், வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணிக்கை போனற்வை பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளிலேயே நடைபெற உள்ளதால், அந்த நாட்களில் விடுமுறை அளிக்க திட்டமிட்டு வருகிறது.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் சில தேர்வுகளை தள்ளி வைத்த நிலையில், மாநில தேர்தல் ஆணையரும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நாளில் தேர்வுகள் ஏதாவது நடைபெறுகிறதா; உள்ளூர் திருவிழாக்கள் நடைபெறுகிறதா என்பது குறித்து, அரசு தேர்வு துறை மற்றும் பிற துறை அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் நேற்று ஆலோசனை நடத்தியது.
இதற்கிடையில் பிப்ரவரி 20ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு மையங்களில் யுபிஎஸ்சி தேர்வுகள் நடைபெற இருப்பதால், தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரிகளை தவிர்த்து மற்ற இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டப்பட்டு வருகிறது.
வாக்குப்பதிவையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு வாக்கு பதிவு நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறக்கூடிய பிப்ரவரி 22ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.