சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தொகுதிகள் பங்கீடு செய்வது தொடர்பாக, அதிமுக மற்றும் பாஜக இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இன்று சுமார் 3 மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில், இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்படவில்லை.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். ஏற்கனவே திமுகவுடன் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுகவுடன் கூட்டணி கட்சியான பாஜகவும் கூட்டணி குறித்து பேசி வருகிறது.
அதன்படி, இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலையிலான குழுவினர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இரு தரப்பினர் இடையே சுமார் 3 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த பேச்சுவார்த்தையில் கோவை, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில் ஆகிய 4 மாநகராட்சிகளையும், நகராட்சிகளில் 30% இடங்களை பாஜகவுக்கு ஒதுக்கும்படி அக்கட்சி வலியுறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், பாஜகவுக்கு அதிக இடங்களை வழங்க அதிமுக மறுத்து வருவதாகவும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்க அதிமுக தயார் என தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘அதிமுகவுடன் இடப் பங்கீடு பேச்சு வார்த்தையின் பின்னடைவு, சிக்கல் எதுவும் கிடையாது’ அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்று தெரிவித்தார். மேலும், கிட்டத்தட்ட 12,838 வார்டுகளில் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து பேசிதான் முடிவு செய்ய முடியும். இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி, முக்கியமான எதிர்கட்சியாக இருக்கும் என்று கூறியதுடன் பேச்சுவார்த்தை நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.