சென்னை: நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமகபெரும் தோல்வி அடைந்து மண்ணை கவ்வி உள்ளது. பாமக தலைமை யின் மீதான அதிருப்தி காரணமாக வன்னியர் இன மக்களின் வாக்குகள் அனைத்தும் அப்படியே திமுகவுக்கு சென்றுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் தேர்தலையொட்டி பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “நமது தெரு, நமது நகரம், நமது எதிர்காலம்” என்று கூறியிருந்தார். ஆனால், பாமகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிகளில் 4 வார்டுகளிலும், நகராட்சிகளில் 48 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 73 வார்டுகளிலும் பாமக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மொத்தத்தில் 125 வார்டுகளில் மட்டுமே பாமக வெற்றிபெற்றுள்ளது. வன்னியர் பெல்ட் எனப்படும் வட மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் பாமக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
ஆனால், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பழமொழிக்கேற்ப இந்த முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “பாமக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நகர்ப்புற வளர்ச்சிக்கான செயல் திட்டங்களை முன்வைத்து போட்டியிட்டது. மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை முன்வைத்த பாமக-விற்கு கிடைந்துள்ள இந்த வெற்றி கவுரவமானது; ஆனால், போதுமானது அல்ல. தேர்தலில் பண பலமும், அதிகார பலமும் கட்டவிழ்த்து விடப்பட்டன. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்தே அதிகார சுனாமி சுழன்றடிக்கத் தொடங்கி விட்டது. மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டிய இந்தத் தேர்தலில் பணம் மூலம் தான் வாக்குகள் வாங்கப்பட்டன என எப்போதும் போல புலம்பி உள்ளார்.
ஆனால், பாமக நிறுவனரோ, கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது கூறிய உறுதிமொழியை நிறைவேற்றாமல், வன்னியர் இன மக்களை தனது கைத்தடியாக நினைத்து, தனது குடும்பத்தை மட்டுமே வளர்த்து வந்ததும், ஒவ்வொரு தேர்தலின்போதும், பச்சோந்தி போல இடத்திற்கு இடம் வண்ணம் மாறுவதுபோல, தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றிக்கொண்டும், கூட்டணி கட்சியை வசைபாடுவதையுமே வாடிக்கையாக வைத்துக்கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள நெருக்கடி கொடுத்து, பல தொகுதிகளை வலுக்கட்டாயமாக கேட்டுப்பெற்ற பாமக பெருந்தோல்வி அடைந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால்,அடுத்த 6 மாதத்திற்குள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு, திமுக பக்கம் சாய முனைந்தது. ஆனால், திமுக தலைமையோ, பாமக என்ற பச்சோந்தியை தனது கூட்டணியில் சேர்ப்பதில்லை என்பதில் தீர்மானமாக இருந்ததால், தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்துக்கு பாமக தள்ளப்பட்டது.
இதன் பாதிப்பு, நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிரொலித்துள்ளது. வன்னியர்கள் அதிகம்வசிக்கும் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வாக்குகள், பாமகவை விட்டு, திமுகவுக்கே விழுந்துள்ளன. திமுகவின் பிரமாண்டமான வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என்பதை மறுப்பதிற்கில்லை.
இந்த தேர்தலில் திமுக மட்டும் 21 மாநகராட்சிகளில் 952 மாநகராட்சி வார்டுகளை திமுக வென்றுள்ளது. 2360 நகராட்சி வார்டுகளுடன், 4388 பேரூராட்சி வார்டுகளை திமுக மொத்தமாக கைப்பற்றி வென்றுள்ளது. எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாமை, அதிமுகவின் இரட்டை தலைமை, பாமக, பாஜக, நாம் தமிழர், மநீம கட்சிகள் தனித்து போட்டியிட்டதால், வாக்குகள் சிதறியது. இதனால் திமுக தனது வெற்றியை வெறித்தனமாக பதிவு செய்துள்ளது.
வன்னியர்கள் அதிகம் வசிக்கும், மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர் உள்ளடங்கிய வடமாவட்டங்கள் அனைத்திலும் திமுகதான் வெற்றி பெற்றுள்ளது. அந்த பகுதியில் உள்ள வன்னியர்கள் வாக்குகள் அப்படியே திமுகவுக்கு கிடைத்துள்ளது.
தர்மபுரி திமுக எம்.பி. செந்தில்குமார், பாமகவுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறார். பாமகவின் ஒவ்வொரு செயலுக்கும் பதிலடி கொடுத்துவரும் அவர் இந்ததேர்தலில் பாமகவை தோற்கடிப்பதில் தீவிரம் கவனம் செலுத்தினார். அவரது அரசியல் சாணக்கியதனம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தர்மபுரி மாவட்டத்தில் பாமகவுக்கு சாவுமணி அடித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாமக கூட்டணி பெறும் வெற்றி பெற்ற தருமபுரி மாவட்டம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், முழுமையாக திமுகவிடம் சென்றுள்ளது. முக்கியமாக தர்மபுரி நகராட்சி மற்றும் பேரூராட்சி இரண்டையும் திமுக வசப்படுத்தி உள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரியை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக, பாமகவின் தான்தோன்றித்தனமாக செயலே என்று வன்னியர்கள் அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் வெற்றிபெற்ற பாமக, அடுத்த 6 மாதத்தின் தனது நிலையை மாற்றியதால்தான், இந்த மாபெரும் இழப்பு என்றும், இதனால், வட மாவட்டங்களில் பாமக காணாமல் போனது என்றும் விமர்சிக்கப்படுகிறது. அதுபோல, வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பும், இந்த தேர்தலில் மக்களிடையே எடுபடவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டு 7603 பேரூராட்சி வார்டுகளில் 73ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 3842 நகராட்சி வார்டுகளில் 48ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 1373 மாநகராட்சி வார்டுகளில் 5ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாமக தனது அரசியல் ஸ்திரத்தன்மையை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறாமல், ஒருமித்த கருத்தோடு, பீடு நடை போட்டு மக்களோடு மக்களாக கலந்து, மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் கட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும்.
இல்லையேல், மாற்றம் ஏமாற்றமாகவே தொடர்வது மட்டுமின்றி, இன்னொரு அதிமுகவாக, பாமக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை…