சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்  வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் விறுவிறு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, அமமுக, விசிக, தேமுதிக கட்சிகள் இன்று கட்சியினருடன் ஆலோசனை நடத்துகின்றன.

தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் (Nomination) இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இதை முன்னிட்டு, மாநகராட்சி மைய அலுவலகங்களில் இருந்து, மண்டல அலுவலகங்களுக்கு விண்ணப்ப படிவங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. மேலும் வேட்புமனு தாக்கலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வரும் சனிக்கிழமையும் (நாளை) அரசு அலுவலகங்களுக்கு வேலை நாள் என்பதால், அன்றும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் தேர்தலில் கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பிரசாரம் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து அரசியல் கட்சிகள் இன்று ஆலோசனை நடத்து கின்றன. நேற்று மாலை, திமுக தரப்பில், முதல்வரும், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம்  நடைபெற்றது. இதில் பல்வேறு தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுப்பது உள்பட பல தகவல்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு அதிமுக சார்பில்  உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், கூட்டணி கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு கூறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

அதுபோல, அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவும் இன்று ஆலோசனை நடத்துகிறது. அதிமுகவுடன் வார்டு பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து பாஜக இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

திமுக கூட்டணி கட்சிகளான,  காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் இன்று ஆலோசனை நடத்த உள்ளன. பாமகவும் இன்று தனியாக ஆலோசனை நடத்துகிறது. அதுபோல  அமமுக நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த நிலையில்,  , உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.