சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் இலவச தொகுப்பு வழங்கிய பிறகே நகர்ப்பு உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது. பொதுமக்களின் வாக்குகளை அள்ளும் நோக்கில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 2வது வாரத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல வருட இழுபறிக்கு பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் இரு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கடந்த ஆண்டு (2020) ஜனவரியில் பொறுப்பேற்றுக்கொண்டனர். பின்னர் விடுபட்ட 9 மாவட்டங்களுக் கும் உச்சநீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து செப்டம்பரில் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, டிசம்பருக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்த உச்சநீதிமன்றம் அறிவிறுத்தியது.
இதைத்தொடர்ந்து, அதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முன்னெடுத்தது. இதன் காரணமாக, திமுக உள்பட அரசியல் கட்சிகளிலும் தேர்தலில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனுக்களை பெற்றன. ஆனால், மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்து உள்ளது. அதை ஜனவரி 3ந்தேதி முதல் வழங்க திட்டமிட்டு உள்ளது. அத்துடன், ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியம் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதன் காரணமாக, தேர்தலில் எளிதில் வெற்றியை பெறும் நோக்கில், பொங்கல் முடிந்த உடன் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க மாநில தேர்தல் ஆணையம் பணிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.