சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, 12,838 உள்ளாட்சி பதவிகளுக்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தமுள்ள 12,838 வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ந்தேதி தொடங்கி நேற்றுடன் (பிப்ரவரி 4ந்தேதி) முடிவடைந்தது. இன்று (பிப்ரவரி 5ந்தேதி) வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. 7ந்தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் வேட்புமனுத்தாக்கல் தொடங்கிய கடந்த ஜனவரி 28 முதல் நேற்று வரை சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், 699 வட்டார பார்வையாளர்கள் ஆகியோர் நேற்றே தங்கள் மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் பணிகளைத் தொடங்கினர்.
தேர்தல் நடைபெற உள்ள 12,838 உள்ளாட்சி பதவிகளுக்கு 75ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், கடைசி நாளான நேற்று ஒரேநாளில் 27,365 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அன்று வரை மொத்தம் 37,518 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வேட்புமனு பரிசீலனை இன்று (5ந்தேதி) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இப்பணிகளை சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் அளிக்காமல், நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும். பரிசீலனையின்போது வரும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சார்பாளர்கள் சமூக இடைவெளி விட்டு இருப்பதையும், முகக்கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவுசெய்ய வேண்டும் என்று அனைத்துமாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையர்வெ.பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
வேட்புமனுக்களை திரும்பப் பெற 7-ம் தேதி கடைசி நாள். சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் அன்றே ஒதுக்கப்பட உள்ளன. அதையடுத்து வரும் 8-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.