சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சியில்  5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல மதுரையில் 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளிடையே திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் முதல்வருடன் கூட்டணி கட்சிகள் தலைவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், மாவட்டம் வாரியாக கூட்டணி கட்சிகள் இடையே ஆலோசிக்கப்பட்டு வருகிறது.  இன்று மாலைக் குள் கூட்டணிக் கட்சிகளுடனான இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நிறைவு செய்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இநத் நிலையில்,  திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பல மாவட்டங்களில்  உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. முதற்கட்ட தகவலில், மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 9 வார்டுகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 5 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, 25 , 30 , 48 , 51 , 55 ஆகிய 5 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 5 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் 25 வது வார்டில் பூபேஷ் , 30 வது வார்டில் முத்துலட்சுமி , 48 வது வார்டில் விஜயலட்சுமி , 51 வது வார்டில் செந்தில்குமார் , 55 வது வார்டில் தீபிகா ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் , பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் இன்னும் இறுதியாகாத நிலை உள்ளது.