சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அன்றைய தினம் நடைபெற உள்ள போட்டித்தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும்  மத்திய அரசு நடத்தும்  யுபிஎஸ்சி மெயின் தேர்வு  வருகிற (ஜனவரி )  7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதேபோல் வரும் ஞாயிறு அன்று (ஜன.9) டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறுகிறது. ஆனால் அன்றைய தினம்  முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால், தேர்வுகளை எழுத விண்ணப்பித்தவர்களிடையே குழப்பம் நிலவியது.   இதையடுத்து, ஊரடங்கு நாளில் நடைபெறும்   போட்டித்தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு   வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை யில் ஒன்றிய மற்றும் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம்( யூ.பி.எஸ்.சி / டி.என்.பி.எஸ்,சி) நடத்தும் தேர்வுகள், மற்ற போட்டித் தேர்வுகள் , நிறுவனங்களில் நடைபெறும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்கச் செல்லும் இளைஞர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு அல்லது நிறுவனங்களின் அழைப்பு கடிதம் ஆகிய வற்றை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

இதுபோன்ற ஊரடங்கு நாட்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது அவர்களுக்கு காவல் துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.