சென்னை:
தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் கடந்த ஆண்டு 3 முறை பால் விலையை உயர்த்தியது. அதுபோல ஆவின் நிறுவனமும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பால்விலையை உயர்த்தியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தின் பால் தேவையினை தனியார் பால் நிறுவனங்களே பெருமளவில் நிவர்த்தி செய்து வருகின்றன. அரசு நிறுவனமான ஆவின் சுமார் 16 சதவிகிதம் அளவிலேயே விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனியார் பால் நிறுவனங்களான, ஆரோக்யா, டோட்லா, ஹெரிட்டேஜ் பால் நிறுவனங்கள், நாளை முதல் விலையை உயர்த்துவதாக அறிவித்து உள்ளன. அதன்படி, லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை விலை உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளன.
சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 48 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 52 ரூபாயில் இருந்து 56 ரூபாயாகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் லிட்டருக்கு 60 ரூபாயில் இருந்து 62 ரூபாயாகவும் உயர்த்தப்படுவதாகவும், தயிர் லிட்டருக்கு 58 ரூபாய் இருந்து 62 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த விலை உயர்வுக்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பொதுமக்களும் கடும் அதிர்சிசி அடைந்துள்ளனர்.
[youtube-feed feed=1]