சென்னை:  சமீப காலமாக ரயில்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில்,  ரயிலை தாக்கினாலோ, ரயில் மீது கல்வீசி சேதப்படுத்தினாலோ ரயில்வே சட்டப்பிரிவின்கீழ், 5 ஆண்டு வரைசிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் பல பகுதிகளில் சமூக விரோதிகள் ரயில்கள்மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வந்தே பாரத் ரயில்மீது கல்வீசி தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில்,  மைசூர்-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில், சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூருக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் ஆகிய இரு ரயில்கள்  சமூக விரோதிகளை கற்களை வீசி தாக்கினர். இதில் ரயிலின்  கண்ணாடிகள் சேதமானது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, ரயிலை  சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக, சில சிறுவர்களை பிடித்தனர்.  பின்னர் அவர்களை எச்சரித்தனர். அதுபோல, மற்றொரு தாக்குதல் வழக்கு தொடர்பாகவும், ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து, குற்றவாளியை தேடிவருகின்றனர்.

இந்த நிலையில், ரயில் மீது கல்வீசி சேதப்படுத்தினாலோ, தாக்குதல் நடத்தினாலோ, ரயில்வே சட்டப்பிரிவின் கீழ்,5 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.