டெல்லி:

முஸ்லிம்கள் மெக்கா சென்று வர ஆண்டுதோறும் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. ஏர் இந்தியா விமானத்தில் கட்டண சலுகை மற்றும் மாநிலங்கள் வாரியாக ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை 1.7 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதில் 1.25 லட்சம் பேர் இந்திய ஹஜ் கமிட்டியி மூலம் மானியத்தில் செல்கின்றனர். உ.பி. மாநிலத்தில் 8 ஆயிரம் என்று இருந்த எண்ணிக்கை 29 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

உ.பி. மாநில ஹஜ் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மோசின் ரசா அம்மாநில ஹஜ் அலுவலகத்தை பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘‘சொந்த பணத்தில் செல்ல இயலாத நபர்களுக்கு உதவும் வகையில் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு கோடீஸ்வரர் அரசு பணத்தில் யாத்திரை மேற்கொள்ள கூடாது. இந்த விதிகளை மறுபரீசிலனை செய்து வருகிறோம். விரைவில் அறிவிப்போம்.

முன்பு அமைச்சராக இருந்த அசாம் கான் காலத்தில், ஹஜ் மானியம் பெற்றதில் வெளிப்படைத்தன்மை இல்லை. நான் ஹஜ் கமிட்டிக்கு சென்ற போது உ.பி.க்கான ஒதுக்கீடு உயர்த்தப்பட்டிருப்பது குறித்து அவர்கள் அறியவில்லை. மோடி அரசின் இந்த நடவடிக்கையை அதிகாரிகளும் ஹஜ் கமிட்டிக்கு தெரியபடுத்தவில்லை’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘ இதில் நேர்மை மற்றும் வெளிப்படையான நடைமுறையை கொண்டு வருவோம். அமைச்சராக இருக்கும் நான், எனது குடும்பத்தினர், உறவினர்களை அரசு மானியத்தில் ஹஜ் யாத்திரர மேற்கொள்ளமாட்டேன். பணக்கார முஸ்லிம்கள் ஹஜ் மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். ஏழைகளுக்கு விட்டுக் கொடுத்து பணக்காரர்கள் தனியார் விமானங்களில் ஹஜ் செல்ல வேண்டும்.

காஸ் மானியத்தை ஏழைகளுக்காக விட்டுக்கொடுக்க பிரதமர் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து பலர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். அதேபோல் பணக்கார முஸ்லிம்கள் ஹஜ் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டுகோள் விடுக்கிறேன். நான் முஸ்லிம் என்பதற்காக எனக்கு ஹஜ் துறை வழங்கப்படவில்லை. எனக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளும் வழங்கப்பட்டுள்ளன. இது தலைமை பண்புக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மத, ஜாதி ரீதியில் பாகுபாடு பார்க்கவில்லை’’ என்றார்.

ஹஜ் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அசாம் கான்ஸ் புகைப்படம் இருப்பதை கண்ட அமைச்சர், தற்போதைய ஆட்சியாளர்களின் புகைப்படங்களை வைக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

‘‘ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க பல நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்து வருபவர்களுக்கு அலுவலகத்தில் குடிநீர், உட்காரும் வசதி கூட இல்லை. வருபவர்களை வரவேற்கவோ அல்லது வழிகாட்டவோ யாரும் இல்லை. மானியத்தை குறிப்பிட்ட சில முஸ்லிம்கள் திரும்ப திரும்ப பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட சிலர் மட்டும் எப்படி திரும்ப திரும்ப ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம். ஹஜ் என்பது சுற்றுலா தளமல்ல’’ என்று மோசின் ரசா வருத்தத்துடன் தெரிவித்தார்.