லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக பாலியல் மிரட்டல் விடுத்த சாமியாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து மத சாமியார் ஒருவர் ஜீப்பில் இருந்தவாறு பொதுமக்கள் இடையே உரை நிகழ்த்தினார்.  அப்போது, முஸ்லலிம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என மிரட்டினார். இந்த சர்ச்சைக்குரிய சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், 11 நாட்களுக்கு பிறகு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லஷ்மண் தாஸ் ஆசிரமத்தின் தலைவரான பஜ்ரங் முனி தாஸ். இவர் கடந்த கடந்த 2 ஆம் தேதி  இந்து சமயம் குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது, ’இங்குள்ள இஸ்லாமியர்கள் யாராவது இந்து பெண்களுக்குத் தொல்லை கொடுத்தால் இஸ்லாமிய பெண்களைக் கடத்திச் சென்று பொதுவெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்வேன் என மிரட்டல் விடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பஜ்ரங் முனி தாஸைக் கைது செய்ய வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில், இன்று சாமியார் பஜ்ரங் முனி தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.