லக்னோ:

புதுமண தம்பதிகளுக்கு காண்டம் பரிசு வழங்கும் திட்டம் வரும் 11ம் தேதி உ.பி அரசு அறிமுகம் செய்கிறது.

உலக மக்கள் தொகை தினமான வரும் 11ம் தேதி மத்திய அரசின் உதவியோடு பரிவார் விகாஸ் என்ற திட்டத்தை உ.பி அரசு செயல்படுத்தவுள்ளது. இதில் புதுமண தம்பதிகளுக்க காண்டமுடன் கூடிய பரிசு பெட்டகத்தை அரசு வழங்கவுள்ளது.

ஆஷா திட்ட பணியாளர்கள் மூலம் இந்த பரிசு பெட்டகத்தை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த பெட்டகத்தில் பாதுகாப்பான உடலுறவு குறித்த கையேடு, வழிகாட்டு நெறிமுறை ஆகியவையும் சேர்த்து வழங்கப்படுகிறது.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் உ.பி. 3.3 சதவீதமாக உள்ளது. உ.பி.யில் 11 மாவட்டஙகளில் மட்டும் இதன் அளவு 4 சதவீதமாக உள்ளது. பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், அஸ்ஸாம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 28 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.

பரிவார் விகாஸ் திட்டம் அதிக குழந்தைகள் பிறப்புள்ள இந்த 7 மாநிலங்களின் 145 மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது. திருமண வாழ்க்கையில் புதுமண தம்பதிகளுக்கு உள்ள பொறுப்பை எடுத்துக் கூறி அவர்களை அதற்கு தயார் செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று திட்ட மேலாளர் அவினேஷ் சக்சேனா தெரிவித்துள்ளார்.

குடும்ப கட்டுப்பாடின் ஒரு அங்கமாக சுகாதர மையங்கள், கிராம பஞ்சாயத்துக்களில் இலவசமாக காண்டம் பெட்டிகளை வைக்க உ.பி. அரசு முடிவு செய்துள்ளது. ஒரு முறை கருத்தடை ஊசி போட்டுக் கொள்ளும் பெண்களுக்கு ரூ. 100 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கருத்தடை செய்து கொள்ளும் பெண்களுக்கு பல்வேறு ஊக்குவிக்கும் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.