அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழா மெகா நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதனைக் காண அயோத்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில் அவர்களுக்கு ஜனவரி 23ம் தேதி முதல் ராமர் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் உள்ளதாகக் கூறி அயோத்திக்குள் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று உ.பி. அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் அயோத்தியை ஒட்டிய எல்லை மாவட்டங்களில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

ப்ரயாக்ராஜில் இருந்து அயோத்தி செல்லும் பேருந்துகளில் 10 பேருக்கு மேல் ஏற்றக்கூடாது என்று ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதால் மக்கள் அங்கும் இங்கும் அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தவிர, அயோத்தி செல்ல முடியாத நிலையில் கடும் குளிரில் தங்குவதற்கு இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

ராமர் கோயில் முழுமையாக கட்டிமுடிக்கப்படாத நிலையில் குடமுழுக்கு நடத்துவதற்கு சங்கராச்சாரியார்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அரசியல் கட்சியினரும் இது தேர்தலுக்காக பாஜக செய்யும் அரசியல் என்று குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்த நிலையில் எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் கோயில் திறக்கப்பட்ட நிலையில் அயோத்திக்கு வரும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுவதை அடுத்து எல்லா ஏற்பாடுகளுடன் கோயில் முழுமையாக கட்டிமுடித்த பின் திறந்திருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.