க்னோ

கொரோனாவின் தாக்கத்தால் மனிதர்கள் அவதியுறும் உத்தரப்பிரதேசத்தில் பசுக்களுக்கு ஆக்சிஜன் அளவு சோதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பா.ஜ.க ஆளும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் சிக்கித் திணறி வருகிறது.  மக்கள் ஆக்சிஜன் சிலிண்டருக்காக வீதியில் அலைகின்றனர்.  மயானங்களில் நீண்ட வரிசையில் சடலங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.  பலரும் படுக்கை வசதி இல்லாமல் வாகனத்திலேயே காத்திருக்கின்றனர்.  இது போன்ற காட்சிகள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஒவ்வொரு ஊரிலும் தென்படுகின்றன.

இந்நிலையில் மக்களைப் பாதுகாப்பதற்கு உத்தரவிடாமல், பசுமாடுகளை பாதுகாக்குமாறு அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  அந்த உத்தரவில்  பசுக்களுக்கான முகாம்கள் அனைத்திலும், கொரோனாவுக்கான தடுப்பு வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முகாம்களில் வெப்பநிலை பரிசோதிக்கும் வசதிகளை ஏற்படுத்தவும், ஆக்சிஜன் பரிசோதிக்கும் ஆக்ஸிமீட்டர்களை பயன்படுத்தி மாடுகளைத் தினமும் பரிசோதிக்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.  உ பொ முழுவதும் 5 ஆயிரத்து 268 பசு பாதுகாப்பு மையங்கள் செயல்படுவதாகவும், இவற்றில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்படுவதாகவும் அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த உத்தரவால் அதிர்ச்சி அடைந்த ஆர்வலர்கள், “ பசுமாடுகளுக்கு முகாம்கள் அமைத்து, அவற்றில் எத்தனை மாடுகள் பராமரிக்கப்படுகின்றன என புள்ளி விவரங்களை யோகி ஆதித்யநாத் அரசு வெளியிடுகிறது.  ஆனால், கொரோனாவால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள்?, மாநிலத்தில் எத்தனை படுக்கை வசதிகள் இருக்கிறது?, ஆக்சிஜன் போதுமான அளவு உள்ளதா? என்பன போன்ற தகவல்கள் வராது.   கேள்வி கேட்பவர்களை பா.ஜ.க அரசு மிரட்டும்” என கூறி உள்ளனர்.