லக்னோ
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு சர்வதேச ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
நாடெங்கும் கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் கொரோனா தடுப்பூசிகள்: போடுவது மிகவும் அவசியமாகி உள்ளது. கடந்த மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் போதிய அளவு தடுப்பூசி மருந்துகள் இல்லாததால் இதுவரை பல மாநிலங்களில் பணி தொடங்கப்படவில்லை.
மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடத் தேவையான மருந்துகளை அந்தந்த மாநிலங்களே கொள்முதல் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது.
இதையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் இன்று சர்வதேச அளவில் 4 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசிக்கான ஒப்பந்தப்புள்ளி அழைப்பு விடுத்துள்ளது. இந்த மருந்துகளை மாதத்துக்கு 60 முதல் 80 லட்சம் டோஸ்களாக 6 மாதங்களில் அளிக்க வேண்டும் என அந்த ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.,
இதுவரை மொத்தம் 8 மாநிலங்கள் சர்வதேச அளவில் ஒப்பந்தப் புள்ளி வெளியிட்டு கொரோனா தடுப்பூசி மருந்துகளைக் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளன. ஆனால் இந்திய மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ள வெளிநாட்டு மருந்துகளை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். இதுவரை ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி மருந்துக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,.