ஆக்ஸிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி நோயாளிகளை இடமில்லை என்று கூறி வெளியில் அனுப்பும் மருத்துவமனைகள் அல்லது இதுகுறித்து ஊடகங்களுக்கு புகார் அளிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த ஆன்லைன் கூட்டத்தில், பேசிய உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இவ்வாறு கூறியதாக மாநில சுகாதார துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லை அதனால் நோயாளியை வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறும் மருத்துவமனைகள், மக்களிடையே வேண்டுமென்றே அச்சத்தை ஏற்படுத்த அவ்வாறு கூறுகிறதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
உத்தரபிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்று ஆதித்யநாத் அந்த கூட்டத்தில் பேசியதாகவும். ஒவ்வொரு பொது மற்றும் தனியார் மருத்துவமனையிலும் ஆக்சிஜன் கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்கிறது, ஆனால் அதன் தவறான பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதே நேரத்தில் அவரின் அடுத்ததடுத்த முன்னுக்கு பின் முரணான பேச்சு மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழலை மறைமுகமாக ஒப்புக்கொள்வது போல் இருந்தது.
“100 அல்லது அதற்கு மேற்பட்ட படுக்கைகள் கொண்ட ஒவ்வொரு அரசு அல்லது தனியார் மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் ஆலை இருப்பதை உறுதி செய்யுமாறு அவர் அதிகாரிகளை கேட்டார். திட்டங்களைத் தயாரித்து தலைமைச் செயலாளருக்கு அனுப்புமாறு அவர் அவர்களிடம் கூறினார்” என்று அந்த அதிகாரி கூறினார்.
“லக்னோ மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள பல மருத்துவமனைகள் வார இறுதியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து மருத்துவமனையின் வெளியே தகவல் பலகையில் தெரிவிக்கவேண்டும், கோவிட் நோயாளிகளை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு அவர்கள் குடும்பத்தினரை அறிவுறுத்த வேண்டும்.
“ஒவ்வொரு மருத்துவமனைக்கும் வந்து ஆக்சிஜன் கையிருப்பு குறித்து ஆய்வு செய்ய முதல்வரை நான் அழைக்கிறேன், அப்படி அவர் வந்தால் மருத்துவமனைகளின் நிலையையும் மக்களின் துயருக்கும் யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும், இது அவருக்கு தெரிந்ததால் தான் அவர் அவ்வாறு செய்ய மறுக்கிறார்” என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு தனியார் மருத்துவமனை நிர்வாகி தெரிவித்தார்.
“சடலங்களை எரிப்பதற்கு புதைப்பதற்கும் கூட இடம் இல்லாமல் மக்கள் அவதிப்படுவது அவருக்கு தெரியவில்லை, மாறாக மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிக்கொண்டு உண்மை நிலையை மறைக்க பார்க்கிறார்” என்று அவர் மேலும் கூறினார்.
கூட்டத்திற்கு பிறகு, திங்களன்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதாக லக்கிம்பூர் கெரி, ஃபிரோசாபாத், பரேலி மற்றும் மீரட் மாவட்டங்களைச் சேர்ந்த பல மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
“ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக எங்கள் மருத்துவமனையில் இருந்து 20 நோயாளிகளை ஆர்யாவார்ட் மருத்துவமனைக்கு மாற்றினோம். எங்களுக்கு ஒரு நாளைக்கு 300 முதல் 400 சிலிண்டர்கள் தேவை, ஆனால் 150 மட்டுமே கிடைக்கிறது” என்று மீரட்டின் ஆனந்த் மருத்துவமனையின் டாக்டர் சஞ்சய் ஜெயின் கூறினார்.
“எங்கள் மருத்துவமனையில் 80 (கோவிட்) நோயாளிகள் உள்ளனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறை அவர்களின் சிகிச்சைக்கு இடையூறாக உள்ளது” என்று மீரட்டின் நுடெமா மருத்துவமனையின் டாக்டர் ரோஹித் கம்போஜ் கூறினார்.
“இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லை, எங்களுக்கு 100 சிலிண்டர்கள் தேவை படும் நிலையில் 10 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. நோயாளிகளின் உறவினர்கள் கூச்சலிடுவதுடன் அவர்களை வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்கிறார்கள்” என்று ஃபைரோசாபாத் மாவட்ட மருத்துவமனையைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் கூறினார்.
சனிக்கிழமையன்று, ஆக்ராவில் உள்ள 10 மருத்துவமனைகளில் இருந்து சுமார் 1,000 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் வெளியேற்றப்பட்டனர் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்டத் தலைவர் டாக்டர் ஓ.பி. யாதவ் தெரிவித்திருந்தார்.
“எங்களுக்கு வாரத்திற்கு 50 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது, ஆனால் கடந்த 10 நாட்களில் எங்களுக்கு 5 சிலிண்டர்களை மட்டுமே அரசு வழங்கியது. எங்களுக்கு வேறு வழி இல்லாமல் (கோவிட்) நோயாளிகளை வெளியேற்றினோம்” என்று ஆக்ராவின் யஷ்வந்த் மருத்துவமனையின் டாக்டர் சுரேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.