சர்ச்சையில் சிக்கிய யோகி ஆதித்ய நாத் : மன்னிப்பு கேட்க  வலியுறுத்தல்..

அயோத்தியில்  ராமர் கோயில் கட்டுவதற்காக நடந்த பூமி பூஜை குறித்து உத்தரப்பிரதேச மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்ய நாத், தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் ‘’ அயோத்தியில் மசூதி கட்டுவதற்குப் பூமி பூஜை நடந்தால் நீங்கள் கலந்து கொள்வீர்களா?’ என கேள்வி கேட்கப்பட்டது.

‘’ஒரு முதல்-அமைச்சர் என்ற முறையில் மதம், சாதி மற்றும் சமூகங்களை வேறுபடுத்தி நான் பார்ப்பதில்லை. ஆனால் நான் ஒரு இந்து மற்றும் யோகி என்ற முறையில், அந்த நிகழ்ச்சிக்குப் போக மாட்டேன்’’ என்று பதில் அளித்தார்.

அவரது கருத்து சர்ச்சை ஆகியுள்ளது.

‘’முதல்- அமைச்சர் என்பவர் உ.பி.மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். இந்துக்களுக்கு மட்டும் அவர் முதல்வர் அல்ல. பதவிப்பிரமாணத்தின் போது எடுத்த   உறுதிமொழியை அவர் மீறியுள்ளார்.’’என அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

‘’சட்ட விதிகளுக்கு முரணாகக் கருத்தைப் பதிவிட்டுள்ளதால், உ.பி. மக்களிடம் யோகி ஆதித்ய நாத் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றும் சமாஜ்வாதி கட்சி போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

இந்த பிரச்சினையில் கருத்து ஏதும் சொல்லக் காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டது.

-பா.பாரதி.