க்னோ

உத்தரப்பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முக்தார் அன்சாரி அம்மாநில பாஜக அரசு குறித்து கடும் புகார் அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முக்தார் அன்சாரி என்பவர் கொலை, ஆள் கடத்தல் மதக் கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட பல குற்றங்களுக்காகக் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவர் சிறையில் இருந்தபடி மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.  கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்..

அவர் வாரணாசிக்கு அருகில் அமைந்துள்ள முகம்மதாபாத் சட்டப்பேரவை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஆகி உள்ளார்.   பஞ்சாப் மாநிலத்திலும் இவர் மீது ஆள் கடத்தல் வழக்கு உள்ளதால் இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணைக்காகப் பஞ்சாப் சிறைக்கு மாற்றப்பட்டார்   மீண்டும் மற்றொரு வழக்குக்காக உபி மாநில சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அன்சாரி தனக்கு உபி சிறையில் பாதுகாப்பு இல்லை எனக் காணொலி காட்சி மூலம் நடந்த நீதிமன்ற விசாரணையில் தெரிவித்துள்ளார்.   அவர் நீதிபதியிடம் தன் மீது உபி பாஜக அரசு அதிருப்தியில் உள்ளதால் அவருக்குச் சிறையில் விஷம் கலந்த உணவு அளிக்க வாய்ப்புள்ளதாகவும் அதனால் தனக்கு உயர்மட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்..

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த விசாரணையில் தன்னை சிறையிலேயே கொல்ல ரூ.5 கோடி பேரம் பேசப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார்.   தற்போது உணவில் விஷம் கலந்து தன்னை உ பி  மாநில பாஜக  அரசு கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகப் புகார் அளித்துள்ளார்.  இது மாநிலத்தில் கடும் பரபரப்பை உண்டாகி இருக்கிறது.