க்னோ

த்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை ஆளும் கட்சியான பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகிறது.   சில மதங்களுக்கு முன்பு பாஜகவைச் சேர்ந்த சீதாப்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராகேஷ் ராத்தோர் முதல்வர் யோகி மீது கடும் குற்றச்சாட்டுகள் தெரிவித்தார்.

அப்போது அவர், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் என்னும் நிலையில் என்னால் தொகுதி மக்களுக்கு உதவ முடியவில்லை.  எனக்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை.  இதுகுறித்து நாங்கள் அதிகம் பேசினால் எங்கள்: மீது தேசத்துரோக வழக்கு பாயும் என்னும் அச்சம் உள்ளது.  பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்த பரபரப்பு முடிவடைவதற்குள் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவை ராகேஷ் ராத்தோர் சந்தித்துள்ளார்.   இந்த தகவல் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   பாஜகவின் மூத்த நிர்வாகி ஒருவர், “ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.  எனவே அவர்களுக்குத் தேர்தல் வாய்ப்பு கிடைக்காது என்பதால் வேறு இடங்களைத் தேடுகின்றனர்.  ராகேஷ் ராத்தோர் அவர்களில் ஒருவ்ர்” என தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி தரப்பில் இந்த சந்திப்பைப் பலரும் வரவேற்றுள்ளனர்.  சமாஜ்வாத்ஹி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி, “சுமார் 100க்கும் மேற்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் கட்சித் தலைமையுடன் தொடர்பில் உள்ளனர்.  எங்கள் கட்சியில் இணைவதற்காக அவர்கள்: கட்சித்  தலைமையைச் சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.” எனக்  கூறி உள்ளார்.