லக்னோ: ஊரடங்கின் போது உத்தரப்பிரதேசத்தில் 70 மாவட்டங்களில் 40 மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் சட்டத்தை மதிக்கும் மாநிலம், குற்றச் செயல்கள் நடக்காத மாநிலம் என்ற அடையாளத்துடன் பூதாகரப்படுத்தப்பட்ட விஷயத்தில் ஒரு கடிதம் வழியே இப்போது உண்மை வெளிவந்திருக்கிறது.
கடந்த 18ம் தேதி, அம்மாநில கூடுதல் தலைமை செயலாளர் அவ்னீஷ் குமார் அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். தப்லிகி ஜமாத் மற்றும் கொரோனா பாதிப்புகள் தொடர்பான நபர்களின் எண்ணிக்கையை மையமாகக் கொண்டு சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றி, மாவட்ட வாரியான விவரங்களைக் கொண்ட ஒரு பட்டியலை அவர் அனுப்பி உள்ளார்.
மேலும், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்த கடுமையுடன் நடவடிக்கையை அமல்படுத்துமாறு உத்தரவிட்டார். அந்தந்த மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரவித்துள்ளார்.
அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட பட்டியலின் ஆய்வு, முஸ்லிம்களின் கணிசமான மக்கள்தொகை கொண்ட மேற்கு உத்தரபிரேதேசத்தில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை பற்றி கவலை எழுந்துள்ளதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, மீரட் பகுதியில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 54 ஆகவும், ஜமாத் நிர்வாகிகளின் எண்ணிக்கை 339 ஆகவும் உள்ளது. அதே நேரத்தில் வாரணாசியில் சட்டம் ஒழுங்கு பற்றியும் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
அதில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8, ஜமாத் நிர்வாகிகளின் எண்ணிக்கை 37, போலீஸ் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது 3 முறை தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சட்டம், ஒழுங்கு திருப்தியற்றதாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பிரமுகர் அஜய் குமார் லாலு கூறியதாவது: செய்ய வேண்டிய வேலைகளை விட்டு, பந்தாவாக வலம் வருவதில் தான் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் இருக்கிறார். கொரோனா தொற்றுநோய்களின் காலங்களில் ஏழை, விவசாயிகள், தினசரி கூலி தொழிலாளர்கள், தலித்துகள் மற்றும் பின்தங்கிய மக்களுக்கு யோகி அரசு எதுவும் செய்யவில்லை என்றார்.
ஏழை மக்களிடம் பணம் இல்லை. ஒவ்வொரு நாளிலும் மாநிலத்தின் நிலைமை மோசமடைந்து வருகிறது. இந்த அரசாங்கம் இதை ஒரு படிப்பினையான கொண்டு செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.