உத்தர பிரதேச மாநிலம் பதாவுனில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி ஜோத்ஸ்னா ராய் நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த டிசம்பர் மாதம் சக நீதிபதி ஒருவர் தன்னை இரவு நேரங்களில் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாகவும் இதுகுறித்து புகார் அளித்தும் பலனில்லாததால் தன்னை கருணை கொலை செய்யக்கோரி உ.பி. மாநில பெண் நீதிபதி ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் 29 வயதான இளம் பெண் நீதிபதி ஜோத்ஸ்னா ராய் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. மாநிலம் மவு மாவட்டத்தைச் சேர்ந்த ஜோத்ஸ்னா ராய் ஏப்ரல் 29, 2023 முதல் பதாவுன் சிவில் நீதிமன்றத்தில் ஜூனியர் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

இதற்கு முன்பு அவர் அயோத்தியில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வந்த ஜோத்ஸ்னா ராய் தற்போது பதாவுனில் உள்ள ஜட்ஜ் காலனி வளாகத்தில் வசித்து வருகிறார்.

நேற்று காலை 10 மணி ஆகியும் அவர் நீதிமன்றம் வராததை அடுத்து சக நீதிபதிகள் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, ​​அவரது படுக்கையறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டதாகவும் இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுக்கையறை கதவை உடைத்து பார்த்தபோது, ​​ஜோத்ஸ்னா ராய் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததாக காவல்துறையினர் கூறினர்.

தற்கொலைக் கடிதம் உள்ளிட்ட சில ஆவணங்கள் ராயின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கின் மர்மத்தைத் தீர்ப்பதில் இது முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினார்.

முதல் கட்ட விசாரணையில் ஜோத்ஸ்னா ராய் மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெண் நீதிபதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளனர்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர் சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்த நிலையில் இளம் பெண் நீதிபதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.