க்னோ

நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் நிகழ்ந்து 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின்படி 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வங்கதேசம், பாகிஸ்தான்,  ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறிய இஸ்லாமியர் அல்லாதோருக்குக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது   இதற்கு நாடெங்கும்  குறிப்பாக பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களால் கடும் கலவரம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில்  நேற்று முன் தினம் நடந்த கலவரத்தின் போது காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் மரணம் அடைந்தனர்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13 மாவட்டங்களில் நேற்று மதியம் மசூதிகளில் தொழுகையை முடித்த இஸ்லாமியர்கள் தடையை மீறி போராட்டம் நடத்தி உள்ளனர்.   போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கல்லெறி தாக்குதல் நடத்தினார்கள்.

அவர்களைக் கலைக்க காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு ஆகியவற்றை நிகழ்த்தினர். இம்மாநிலத்தில் பிஜ்னூர்,சம்பல், பெரோசாபாத், மீரத், கான்பூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   சுமார் 3500 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  உ பி யில் 16 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.