திண்டிவனம்: தீண்டாமையின் உச்சமாக, சாதிய ரீதியாக அரசு ஊழியரை காலில் விழ வைத்த திமுக கவுன்சிலர் மீது வன்கொடுமை வழக்கு பதிவான நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை காவல்துறை தனிப்படை அமைத்து தேடி கைது செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சமத்துவம் பேணுவதாக கூறப்படும் தமிழ்நாட்டில்தான், தீண்டாமைகளும், ஆணவ கொலைகளும் அரங்கேறி வருகின்றன. ஆனால், திமுக அரசு நேர்மாறாக, சமத்துவம் சமதர்மம் ன வாய் கிழிய பேசி மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், பல தீண்டாமை சம்பவங்கள் திமுகவினராலேயே அரங்கேற்றப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 4 ஆண்டுகளில்தான் ஏராளமான தீண்டாமை, வன்கொடுமை, சாதிய மோதல்கள் நடைபெற்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்த நிலையில், தீண்டாமையின் உச்சமாக, அரசு அலுவரை, சாதிய ரீதியாக திமுக கவுன்சிலர் காலில் விழவைத்த கொடுமை அரங்கேறி உள்ளது. இதையடுத்து, அவர்கள்மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் திமுக கவுன்சிலர் கணவருடன் தலைமறைவாகி உள்ளார். இது பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளதுடன், அதிமுக அரசுமீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் முனியப்பன் என்பவர் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 28ஆம் தேதி திண்டிவனம் திமுக நகர்மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா என்பவர் வார்டு பணிக்கான நிதி ஒதுக்குதல் கோப்பினை எடுத்து வருமாறு கேட்டுள்ளார். அப்போது, பணியில் இருந்த முனியப்பன் முறையாகப் பதிலளிக்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த நகர மன்ற உறுப்பினர் ரம்யா, முனியப்பனைத் தகாத வார்த்தையில் திட்டியதுடன், நகர்மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரனிடம் தெரிவித்துள்ளார். பின்னர், நகராட்சி ஆணையரிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து பொறுப்பு ஆணையர் , ரம்யாவை எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்குமாறு கூறியுள்ளார். ஆனால், அவ்வாறு அளிக்காத நிலையில், அவரது கணவன் ரவிச்சந்திரன் முனியப்பனை அழைத்து கடுமையாக திட்டியதுடன், காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு மிரட்டியுள்ளார்.
இதனை அடுத்து, நகர்மன்ற உறுப்பினர் ரம்யா ராஜாவின் காலில் விழுந்து இளநிலை உதவியாளர் முனியப்பன் அழுதப்படி மன்னிப்பு கேட்டார். இது சக ஊழியர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால், அவர்கள் இதுகுறித்து மற்ற நகராட்சி உறுப்பினர்களிடம் முறையிட்ட நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளரை காலில் விழ வைத்த நகர்மன்ற உறுப்பினர் மற்றும் நகர்மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக, அதிமுக, விசிக உறுப்பினர்கள் உடன் நகராட்சி ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இதற்கிடையில், கவுன்சிலர் காலில் நகராட்சி ஊழியர் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அதிமுக எம்எல்ஏ அர்ஜூனன் தலைமையில் அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில், தடையை மீறி முற்றுகையிட்ட அதிமுக எம்எல்ஏ உள்ளிட்டோர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர், புகாரின் அடிப்படையில் திண்டிவனம் நகராட்சி மேலாளர் நெடுமாறன், வருவாய் அலுவலர் பழனி, சுகாதார அலுவலர் செந்தில்குமார், நகர அமைப்பு அலுவலர் திலகவதி மற்றும் கவுன்சிலர்கள் ரம்யா, ரவிச்சந்திரன், ரம்யாவின் கணவர் ராஜா, பிர்லா செல்வம், நகரமன்ற தலைவரின் உதவியாளர் காமராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது (எஸ்சிஎஸ்டி) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஆனால், இதுவரை அவர்களை கைது செய்யவில்லை.
திமுக நகர்மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா மற்றும் அவரது கணவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சியினரையும், அரசை விமர்சிப்பவர்களையும் இரவோடு இரவாக கைது செய்யும் காவல்துறையினர், வன்கொடுமை புகாரின் பேரில் திமுகவினரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிபிடித்து கைது செய்யுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.