டில்லி:
ராஜஸ்தான், உ.பி., டில்லி மாநிலங்களின் கிராமப் புறங்களின் தீண்டாமை அதிகளவில் கடைபிடிக்கப்படுவது சர்வே மூலம் தெரியவந்துள்ளது.
இந்திய சமூக அணுகுமுறை ஆராய்ச்சி (எஸ்ஏஆர்ஐ) அமைப்பு சார்பில் அதன் பிரதிநிதிகள் மூலம் தொலைபேசி வாயிலாக ஒரு சர்வே மேற்கொண்டது. டில்லி, மும்பை, ராஜஸ்தான், உ.பி. மக்களிடம் இந்த சர்வே 2016ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டது. மொத்தம் 8 ஆயிரத்து 65 பேரிடம் சர்வே நடந்தது. இந்த சர்வே அடிப்படையில் தயாரான அறிக்கை கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் விபரம்:
ராஜஸ்தான், உ.பி. மாநிலங்களில் கிராமப் புறங்களில் உள்ள 3ல் 2 மடங்கு மக்கள் தற்போதும் தீண்டாமையை கடைபிடிக்கின்றனர். மேலும், இந்த பகுதியில் வசிக்கும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தலித் மற்றும் தலித் அல்லாதவர்களுக்கு இடையிலான திருமணங்களை எதிர்த்து வருகின்றனர்.
தீண்டாமைக்கு எதிராக பல ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் கொண்டு வந்தபோதும் இந்த நிலை நீடிக்கிறது. குறிப்பாக பெண்கள் தீண்டாமையை அதிகளவில் கடைபிடிப்பது தெரியவந்தள்ளது. ராஜஸ்தான் கிராமப் புறங்களில் 66 சதவீதமும், உ.பி. கிராமப் புறங்களில் 64 சதவீத பெண்களும் தீண்டாமையை கடைபிடிக்கின்றனர்.
ராஜஸ்தானில் 50 சதவீதம் பேரும், உ.பி.யில் 48 சதவீதம் பேரும், டில்லியில் 39 சதவீதம் பேரும் தீண்டாமையை கடைபிடிப்பது தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் நகர்புறத்தில் 60 சதவீதம், உ.பி. நகர்புறத்தில் 40 சதவீதம் பேரும் தலித் மற்றும் தலித் அல்லாதவர்களுக்கு இடையிலான திருமணங்களை ஏற்க மறுக்கின்றனர்.