சென்னை: தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு, சென்னை திரும்புவோர் வசதிகக்காக நாளை (அக்.22-ல்) முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படு வதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அதன்படி, நாளை நெல்லையில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

நாடு முழுவதும் அக்டோபர் 20ந்தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், தமிழ்நாடு அரசு மற்றும் தெற்கு ரயில்வே சிறப்பு பேருந்துகள், ரயில்களை அறிவித்துள்ளன. அதன்மூலம் பொதுமக்கள் தங்களது ஊர்களுக்கு சென்றை நிலையில், இன்று மீண்டும் சென்னை திரும்புகின்றனர்.
தீபாவளி தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள், மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக ஏராளமான பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், , நெல்லையில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை (வரும் அக். 22 ஆம் தேதி) திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், திருநெல்வேலியில் இருந்து அக். 22 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
எதிர் வழித்தடத்தில் வரும் அக். 23 ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில், நள்ளிரவு 12.05 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றோர், இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.