ஊழல் வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் சூமா ஜூன் 7-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

2009 முதல் 2018 வரை அதிபராக இருந்த சூமா கைது செய்யப்படுவதைத் தவிர்க்க தாமாக முன்வந்து சரண்டர் ஆனார், இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக ஜோஹன்னஸ்பர்க், டர்பன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

ஜேக்கப் சூமா வின் சொந்த மாகாணமான குவா ஜுலு நட்டால் மாகாணத்தில் உள்ள டர்பன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வன்முறை கட்டுக்கடங்காமல் தொடர்கிறது.

இந்த வன்முறையில் இதுவரை 72 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை குறிவைத்து தீவைப்பதும் சூறையாடுவதையும் மேற்கொண்டு வரும் வன்முறையாளர்கள், இந்திய வம்சாவழியினர் நடத்தி வரும் வணிக நிறுவனங்கள் மற்றும் இந்திய வம்சாவழியினரை தாக்கி வருகின்றனர்.

பல இடங்களில் காவல்துறை செயலிழந்து விட்டதாகவும் எந்த வித பாதுகாப்பும் இன்றி அச்ச உணர்வில் வாழ்ந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வு சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தூண்டப்பட்டு வருகின்றன.

ஜேக்கப் சூமா தென் ஆப்ரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினருடன் கைகோர்த்து செயல்பட்டதால் அவர்கள் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அங்கு வாழும் மக்களிடையே கருத்து நிலவுகிறது.

தென் ஆப்ரிக்காவில் உள்ள, நைஜீரியா, ஜிம்பாப்வே மற்றும் பிற ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களின் நிறுவனங்களும் ஒரு சில இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.

அதிபர் சிரில் ராமபோசா தலைமையிலான தென் ஆப்ரிக்க அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று இங்குள்ள இந்தியர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.