ஜோகன்னஸ்பெர்க்

தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைதை எதிர்த்து நடைபெறும் வன்முறை போராட்டங்களால் 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2009 முதல் 2018 வரை தென் ஆப்ரிக்க அதிபராக ஜேக்கப் ஜூமா பதவி வகித்தார்.  தனது பதவிக்காலத்தில் அவர் இந்திய வம்சாவளியினரான குப்தா சகோதரர்களுடன் சேர்ந்து செய்த அரசு ஒப்பந்தங்களில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச் சாட்டு எழுந்தது.  இதையொட்டி அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது.

இந்த விசாரணைக் குழு முன்பு ஆஜராக ஜேக்கப் ஜூமா மறுத்தார்.  ஆயினும் மற்ற சாட்சிகள் ஆஜராகி அவர் ஊழல் செய்ததற்கான ஆதாரங்களை அளித்தனர்.   இதையொட்டி நீதிமன்றம் அவரை விசாரணைக் குழு முன்பு ஆஜராக உத்தரவிட்டது.  அதையும் அவர் பின்பற்றாததால் அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 மாதம் சிறத் தண்டனை அளிக்கப்பட்டது.

சென்ற வாரம் புதன்கிழமை அன்று ஜேக்கப் ஜூமா காவல்துறையிடம் சரண் அடைந்தார்.  அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேக்கப் ஜூமாவின் ஆதரவாளர்கள் கடும் வன்முறை போராட்டம் நடத்தி வருகின்றனர்.    இந்த போராட்டம் ஜூமாவின் சொந்த ஊரில் சிறிய அளவில் தொடங்கி தற்போது நாடெங்கும் பரவி உள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள வணிக வளாகங்கள், கட்டிடங்கள் உள்ளிட்டவை சூறையாடப்படுகின்றன.  பல இடங்களில் வாகனங்கள், கட்டிடங்கள் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன.  இந்த வன்முறையில் இது வரை 70க்கும் அதிகமானோர் சிக்கி உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு இது போன்ற வன்முறை நிகழ்வது இதுவே முதல் முறை ஆகும்.