குல்தீப் சிங்

ன்னாவ், உ. பி.

உன்னாவ் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூட்டு பலாத்காரம் செய்த வழக்கை சிபிஐக்கு உத்திரப் பிரதேச அரசு  மாற்றம் செய்ய உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பஜகவை சேர்ந்த குல்தீப்சிங் செங்கார்.   இவர் தனது தொகுதியை சேர்ந்த 18 வயதுப் பெண் ஒருவரை கடந்த வருடம் ஜூன் மாதம்  பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.   இதை தட்டிக் கேட்ட அந்தப் பெண்ணின் தந்தையை இவருடைய சகோதரரும் மற்றும் சிலரும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதை எதிர்த்து உ.பி முதல்வர் யோகியின் இல்லத்தின் முன்பு அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.    அவரை காப்பாற்றிய யோகியின் பாதுகாவலர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.     மேலும் அவரது தந்தை மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார்.    இந்த நிகழ்வு நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது.    அந்தப் பெண்ணின் தந்தையை தாக்கிய குல்தீப் சிங்கின் சகோதரரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இறந்து போன பெண்ணின் தந்தையின் வீடியோ ஒன்று பரவலாக வெளியாகி வைரல் ஆனது.   அதில் அவர் தன்னை குல்தீப் சிங்கின் சகோதரரும் மற்றவர்களும் தாக்கும் போது காவல்துறையினர் அங்கு இருந்ததாகவும் ஆனால் தன்னை அவர்கள் காப்பாற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.   இந்த வீடியோ உணமியானது தானா என்பது இன்னும் அறியப்படவில்லை.

இந்நிலையில் உத்திரப் பிரதேச அரசு இந்த வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் எனவும் மேலும் இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்ற உத்தேசித்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.    அத்துடன் அந்தப் பெண்ணுக்கும் அவர் குடும்பத்துக்கும்  காவல்துறை பாதுகாப்பு அளிக்கவும் தவறான தகவல்கள் அளித்த காவல் அதிகாரிகள் மற்றும் இரு மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது குல்தீப் சிங் மனைவி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரைக் காண வந்த குல்தீப் சிங், “நான் இன்று லக்னோவில் காவல்துறையில் சரணடையலாம் என்னும் யோசனையில் உள்ளேன்.  அந்தப் பெண்ணின் தந்தை அவர்களின் குடும்ப தகராறில் தாக்கப்பட்டுள்ளார்.   அந்த விவகாரத்தில் என் சகோதரர் தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.   நான் கட்சித் தலைமை முதல்வர் யோகி ஆதித்யநாத்  உத்தரவுப்படி செயல் படுவேன்”  எனத் தெரிவித்துள்ளார்.