திருச்சி:

ஹாலிவுட் படங்களையே தோற்கடிக்கும் விதத்தில் ஓட்டுனர் இல்லாமல் இரண்டு ரெயில் எஞ்சின்கள் ஓடிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 1ஏ பிளாட்பாரத்தில் திருச்சி-ஈரோடு பாசஞ்சர் ரெயிலை இணைக்க, பொன்மலை பணிமனையில் இருந்து எஞ்சின் கொண்டு வரப்பட்டது, டிரைவர் உதயசந்திரன் என்ஜினை ஓட்டி வந்தார். ரெயிலுடன் இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த போது எஞ்சினில் ஒரு சிறு கோளாறு ஏற்பட்டது. அதை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்த ரெயிலின் ஓட்டுனர் தொழில்நுட்ப பணியாளர்களுக்காக காத்திருந்தார். திடீரென அந்த எஞ்சின் நகர்ந்து, அதற்கு முன்பு நின்ற மற்றொரு எஞ்சினையும் தள்ளிக் கொண்டு செல்ல ஆரம்பித்தது.

அதைக்கண்டு அதிர்ந்து போன உதயசந்திரன் எஞ்சினை நிறுத்துவதற்காக அதில் ஏற முயன்றார். ஆனால் அதற்குள் எஞ்சின் வேகம் பிடித்துவிட்டதால் அவரால் ஏற முடியவில்லை. இந்த தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. ஈரோடு வழித்தடத்தில் உள்ள பாலக்கரை, கோட்டை, முத்தரசநல்லூர் ரெயில் நிலையங்களுக்கு தகவல்கள் அனுப்பினர். கற்கள், கட்டைகளை தண்டவாளத்தில் போட்டு எஞ்சின்களை நிறுத்த ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் அனைத்து பணியாளர்களும் உத்தரவிடப்பட்டது.

இந்த முயற்சி பலனளிக்கவில்லை. எஞ்சின்கள் கற்களை, கட்டைகளையும் உடைத்தபடி முன்னேறின. கோட்டை ரெயில் நிலையத்தை எஞ்சின்கள் கடக்கும் போது, ஒரு டெக்னீஷியன் எஞ்சினில் கடும் முயற்சிக்குப் பின் ஏறினார். அவர் பெரிதும் முயன்று முத்தரசம்பேட்டை சிக்னல் அருகே இரு எஞ்சின்களையும் நிறுத்தினார். கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் ஆளின்றி பயணித்த எஞ்சின்களின் பயணம் முடிவுக்கு வந்தது.

எட்டு வருடங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல்&வியாசர்பாடி ஜீவா ஸ்டேஷன் இடையே ஒரு ரெயில் கடத்தப்பட்டு பெரும் விபத்துக்குள்ளாகி, 4 பேர் மரணம் அடைந்தனர், 11 பேர் படுகாயமடந்தனர். ஆனால் இந்த முறை எந்த சேதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது