சென்னை:
பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமித்திருப்பது, பல்கலைக்கழகங்களை காவிமயமாக்க அல்ல, அதை கல்விமயமாக்கவே முயல்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாத நிலையில், நேற்று கன்னட கல்வியாளரை துணைவேந்தராக கவர்னர் பன்வாரிலால் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் காவிரி பிரச்சினை காரணமாக கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருவதால், கன்னடர் ஒருவர் பிரசித்தி பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக நியமனம் செய்திருப்பது தமிழக மக்களி டையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பாகுபாடு காட்டப்படவில்லை என்றார். கடந்த 2 ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாத நிலையில், புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டு வருவதாக வும், பல்கலைக்கழகங்கள் கல்விமயமாக்கவே முயல்கிறோம், காவி மயமாக்கவில்லை என்று கூறினார்.
திறமை அடிப்படையிலேயே துணைவேந்தர் நியமனம் நடைபெற்றுள்ளது. ஆகவே பல்கலைக்கழகத்தில் அரசியலை புகுத்தாதீர்கள். சூரப்பா நியமனத்துக்கு அண்ணா பல்கலை, ஆசிரியர் கூட்டமைப்பே வரவேற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் காவிரி பிரச்சினையில், காவிரி உரிமையை பறிகொடுத்தவர்களே அதற்காக போராடுகிறார்கள். இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே அவகாசம் கேட்கிறோம். தமிழக உரிமையை பாஜக மீட்டெடுக்கும்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.