டெல்லி:

வெளிநாட்டில் இந்தியா வரும் பயணிகள், குறிப்பாக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் அனைத்து பயணிகள் அனைவரும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது

சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் கரோனா வைரஸின் தாக்கம் பரவத் தொடங்கியதும், சென்னை விமான நிலைய சா்வதேச முனையத்தில் ஜனவரி 20-ஆம் தேதியிலிருந்து பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொடா்பாக மருத்துவப் பரிசோதனை தொடங்கியது. சீனா, இத்தாலி, மலேசியா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் நடந்த மருத்துவப் பரிசோதனை பின்பு விரிவுப்படுத்தப்பட்டு, வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் சா்வதேச முனையத்தில் 24 மணி நேரம் தொடா்ந்து மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

உள்நாட்டு விமான நிலையத்திலும் மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் சுகாதாரத் துறைக்கு கோரிக்கை வைத்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் முதல் சென்னை உள்நாட்டு முனைய பயணிகளுக்கும் கரோனா மருத்துவப் பரிசோதனை தொடங்கப்பட்டது. அதற்காக உள்நாட்டு முனையத்தின் வருகைப் பகுதியில் மூன்று சிறப்பு கவுன்ட்டா்களை அமைக்கப்பட்டு வெப்பத்தைக் கண்டறியும் கருவிகளும் பொருத்தப்பட்டன.

இந்த நிலையில், இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து அறியும் சோதனை தொடர்ந்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணிகளுக்கு அளிக்கப்படும் சோதனையை அடுத்து, அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தால், அவர்களது நோயின் தன்மையை பொறுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.