நிமோனியாவில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொரோனா சோதனை : இந்திய அரசு

Must read

டில்லி

நிமோனியாவில் பாதிப்பு அடைந்த அனைவருக்கும் பயணம் மற்றும் தொடர்பு எப்படி இருந்தாலும் சோதனை நடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

நேற்று மாலை 6 மணித் தகவலின்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரே நாளில் 63 பேர் அதிகரித்து மொத்தம் 236 ஆகி உள்ளது.  23 பேர் உடல் நலம் தேறி உள்ளனர். நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.   இதுவரை 14514 பேரிடம் இருந்து 15404 இரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.

அனைத்து சர்வதேச விமானங்களும் இந்தியாவில் தரை இறங்க நாளை முதல் ஒரு வாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.   ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பாதிப்பு அடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால் விமான நிலையங்களில் கொரோனா பாதிப்பு உள்ளதாகச் சந்தேகத்துக்கு உரியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தற்போது கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பயணம் மற்றும் தொடர்பு கொண்டோர் விவரத்தின் அடிப்படையில் கொரோனா சோதனைகள் நடைபெற்று வருகின்றது.   ஆனால் ஒரே நாளில் 63 பேர் அதிகரித்ததால் இந்த சோதனைகளை மேலும் கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி நிமோனியா பாதிப்பு உள்ள அனைவரும் பயணம் மற்றும் தொடர்பு கொண்டோர் குறித்த விவரங்கள் எப்படி இருப்பினும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

More articles

Latest article