டில்லி

கொரோனா சேவையில் ஈடுபட்டுள்ள 9 லட்சம் அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கு இந்திய அரசு இதுவரை முக கவசம் உள்ளிட்ட எதுவும் வழங்காமல் உள்ளது.

உலகெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.   இதில் சீனாவில் 81006 பேர் பாதிக்கப்பட்டு 3255 பேர் உயிரிழந்துள்ளனர்.  அடுத்ததாக இத்தாலியில் 47021 பேர் பாதிக்கப்பட்டு 4032 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இந்த வரிசையில்  இந்தியா 49 ஆம் இடத்தில் உள்ளது.   தற்போது இரண்டாம் நிலையில் உள்ள இந்த பாதிப்பு மூன்றாம் நிலைக்குச் செல்லாமல் தடுக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதற்கு நாடெங்கும் உள்ள 9 லட்சம் அங்கன்வாடி பெண் சமூக நல ஊழியர்கள் பணி அமர்த்தபட்டுள்ளனர்.  கொரோனாவுக்கு எதிரான இந்தியப் படையில் இவர்கள் முதல் வரிசையில் உள்ளனர் எனக் கூறலாம்.   இந்தியாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தியா மற்றும் வெளிநாட்டுப் பயணிகளால் என்பது யாவரும் அறிந்ததே.   தற்போது இந்த பெண் ஊழியர்கள் ஒவ்வொரு பயணியையும் நேரில் சென்று பார்த்து அவர்கள் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் மக்கள் கூடும் இடங்களில் நின்று கொண்டு, “உங்கள் கைகளைக் கழுவவும், இருப்பிடத்தைச் சுத்தமாக வைக்கவும், கூட்டங்கள், மத விழாக்கள்,  திருமணம் ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டாம்,  வெளியில் உணவுகளைத் தவிர்க்கவும்.  வயதானோர் மேலும் கவனமுடன் இருக்கவும்.  குறிப்பாக முக கவசத்தைப் பயன்படுத்தவும்” என விளக்கம் அளிக்கின்றனர்.

இந்தியாவில் இவ்வாறு பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா,மகாராஷ்டிரா, கேரளா போன்ற பல மாநிலங்களில் அங்கன்வாடி பெண் ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.  அவர்களை இவ்வாறு செய்ய உத்தரவிடும் அரசு அவர்களுக்கு முக கவசம், கை சுத்திகரிப்பான் போன்ற எதையும் மத்திய மாநில அரசுகள் வழங்குவதில்லை என்பது மிகவும் சோகமான உண்மையாகும்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் இவ்வாறு சமூக சேவகர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.  அவர்கள் அனைவருக்கும் முக கவசம், கை சுத்திகரிப்பான், கையுறைகள் போன்ற அனைத்து பாதுகாப்புப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.   ஆனால் இந்தியாவில் அது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது குறித்து எந்த ஒரு அரசியல் தலைவரோ அல்லது சமூக ஆர்வலரோ எதுவும் தெரிவிக்கவில்லை.

பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றிய உரையில் சுய ஊரடங்கு தினத்தின் போது மாலை 5 மணிக்கு அவரவர் வீடுகளில் இருந்து இந்த சமூக நல தொண்டர்களுக்கு கை தட்டி நன்றி தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.  இது ஒரு நல்ல செய்கையாகும்.  ஆனால் அந்த சமூக நல தொண்டர்களின் பாதுகாப்புக்கு தேவையான பொருட்களை முதலில் அளித்து விட்டுப் பிறகு பாராட்டினால் மேலும் நல்ல செய்கையாக அமையும் என மக்கள் கூறுகின்றனர்.