வாஷிங்டன்

பிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை வரும் வெள்ளிக்கிழமை முதல் பல நாடுகளுக்கும் எடுத்துச் செல்ல யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.

கடந்த வாரம் பிஃபிஸர் நிறுவனம் தாங்கள் பயோண்டெக் நிறுவனத்துடன் இணைந்து கண்டு பிடித்துள்ள கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி அடைந்துள்ளதால் அதை விநியோகிக்க அவசர அனுமதி கோரி இருந்தது.  இந்த தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது குறித்த கூட்டம் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி நடக்க உள்ளது.  இந்த கூட்டத்தை நடத்தும் மருந்து மற்றும் உணவு கழகம் இந்த கூட்ட முடிவின் அடிப்படையில் மருந்துக்கு அனுமதி வழங்க உள்ளது

மற்றொரு அமெரிக்க நிறுவனமான மாடர்னா நிறுவனமும் தங்களது கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி அளிக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.  இந்த இரு மருந்துகளுக்கும் ஒப்புதல் கிடைத்த உடன் சுமார் 2 கோடி அமெரிக்கர்களுக்குத் தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.  ஒப்புதல் கிடைத்த உடன் யாருக்குத் தடுப்பூசி முதலில் அளிக்க வேண்டும் என்னும் திட்டமும் தயாராக உள்ளது.

அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இந்த மருந்தை எடுத்துச் செல்ல விமானங்களைத் தயார்ப் படுத்தி உள்ளது.   வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து இந்த விமானங்கள் பல நாடுகளுக்கும் மருந்தை எடுத்துச் செல்ல தயாராக உள்ளன.  யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மருந்து அனுப்புவது குறித்து பிஃபிஸர் நிறுவனம் ஏதும் தகவல் அளிக்க மறுத்துள்ளது.

அதிக அளவில் மருந்துகளை எடுத்துச் செல்வது குறித்து ஏற்கனவே விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.   அதன் அடிப்படையில் அதிக அளவு உலர்ந்த பனி (டிரை ஐஸ்) எடுத்துச் செல்ல யுனைடெட் ஏர்லைன்ஸ் அனுமதி கோரி உள்ளது.   ஒவ்வொரு விமானத்திலும் வழக்கமாக எடுத்துச் செல்வதைப் போல் 5 மடங்கு அதாவது 15000 பவுண்டுகள் டிரை ஐஸ் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும் எனத் தெரியவருகிறது.

பிஃபிஸர் நிறுவனம் இந்த மருந்துகளை எடுத்துச் செல்ல சூட்கேஸ் அளவிலான பாக்கிங்குகளை வடிவமைத்துள்ளது.  இந்த சூட்கேஸுக்குள் டிரை குளிர் நிரப்பப்பட்டு அதன் இடையே மருந்துகள் வைக்கப்பட உள்ளன.  வழக்கமாகத் தடுப்பூசிகள் வினியோகஸ்தர்களுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மற்ற இடங்களுக்கு அனுப்பப்படும்.   ஆனால் பிஃபிஸர் நிறுவனம் நேரடியாக அரசு அமைப்புக்களுக்கு இந்த மருந்தை அளிக்க உள்ளது.