டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி காரணமாக, தனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தன்னார்வலம் ஒருவர் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அந்த தடுப்பூசியை தயாரித்து வரும் நிறுவனமான புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம், அந்த தன்னார்வலர் மீது ரூ.100கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி, கொரோனா தொற்று பரவலை தடுப்பதில் 90 சதவிகிதம் வெற்றியளித்துள்ளதாக அறிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருகட்ட சோதனைகள் முடிவடைந்த நிலையில், தற்போது 3வது கட்ட சோதனை நடைபெற்று வருகிறது.  இந்த தடுப்பூசியை இந்தியாவில் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. டிசம்பர் இறுதியில் கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டு வரும் என சீரம் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக  அவரது சார்பில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கும், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் தலைமை செயல் அதிகாரிக்கும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கும் இன்னும் தொடர்புடைய சிலருக்கும் சட்ட நிறுவனம் ஒன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இது சர்ச்சையாகி வரும் நிலையில், தன்னார்வலரின் புகார்  குறித்து கருத்து சீரம் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில்,  “ தன்னார்வலரின் மருத்துவ நிலை குறித்து அனுதாபம் கொள்கிறோம். தன்னார்வலரின் உடல் நல பாதிப்புக்கும் தடுப்பு மருந்து பரிசோதனைக்கு முற்றிலும் எந்த தொடர்பும் கிடையாது. தற்போது விடுக்கப்பட்டுள்ள நோட்டீஸ்  தவறான கருத்துக்களையும் உள்நோக்கத்தையும் கொண்டது. தன்னார்வலர் தனக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பை தவறாக கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையுடன் தொடர்புபடுத்துகிறார். இது முற்றிலும் உள்நோக்கம் கொண்டது. ஏனெனில், உடல் நல பிரச்சினைகள் தடுப்பூசி சோதனையால் ஏற்படவில்லை என மருத்துவக் குழு தன்னார்வலரிடம் குறிப்பிட்டு விளக்கிய போதிலும், நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொதுவெளிக்கு சென்றுள்ளார். எனவே, 100 கோடி ரூபாய் இழப்பீடு கோர உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னார்வலரின் புகார் குறித்து, அறிவுப்பூர்வமாக விளக்கம் அளித்து, அதை தெளிவுபடுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய  சீரம் நிறுவனம், தன்னார்வலர்களை மிரட்டும் நோக்கில் ரூ.100 கோடி இழப்பீடு கேட்பேன் என்று அறிவித்துள்ளது, தடுப்பூசி மீதான நம்பக்கத்தன்மையை கேள்விக்குறியதாக்கி உள்ளது.