கொல்கத்தா: ஜனநாயகம், அரசியலமைப்பு மீதான பாஜகவின் தாக்குதலை தடுக்க ஒன்றிணைய வேண்டும் என்று சோனியாகாந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால், நவீன் பட்நாயக், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு மமதா பானர்ஜி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஜனநாயகம், அரசியலமைப்பு மீதான பாஜகவின் தாக்குதலை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் மத்திய அரசு பிரச்னை கொடுக்கிறது. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்கள் பாஜக உறுப்பினர்களை போல் செயல்படுகின்றனர்.
சிபிஐ, அமலாக்கத்துறையை அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது. திமுக, திரிணாமூல் ஆகிய கட்சிகளை அமலாக்கத்துறை மூலம் மிரட்ட பாஜக நினைக்கிறது. ஒற்றை கட்சி ஆட்சிமுறையை இந்தியா முழுவதும் கொண்டுவர வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.
பாஜகவுக்கு எதிரான இந்த போரில் ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். 5 மாநில தேர்தல்கள் முடிந்தபின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முடிவெடுப்போம் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.