புதிய வேளாண் சட்டங்கள் குறித்த நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்…

Must read

டெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக , உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து, அதுகுறித்து ஆய்வு செய்ய  நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவினர் கடந்த 2 மாதமாக விவசாயிகள் மற்றும் அரசு தரப்பினரை சந்தித்து, கருத்துக்களை கேட்டு, ஆய்வு செய்த நிலையில், இன்று நிபுணர்கள் குழுவின் ஆய்வறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான மத்தியஅரசு, அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. விவசாயிகள் வளம் பெறும் வகையில் 3 சட்டங்களை அமல்படுத்தியது. அதன்படி,  ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல், ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை,  கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது என 3 சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். குறிப்பாக வடமாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த ஆண்டு (2020)  நவம்பர் 26-ம் தேதி முதல் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக மத்தியஅரசுக்கும், விவசாய சங்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற பல சுற்று பேச்சுங்களும் தோல்வி அடைந்தன.

இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.  வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 வேளாண் சட்டங் களுக்கும் இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த சட்டங்களை ஆய்வு செய்ய 4 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்ததது.

உச்சநீதிமன்ற இடைக்கால தடை உத்தரவை  வரவேற்ற விவசாயிகள், நீதிமன்றம் அமைத்த ஆய்வுக் குழுவை  ஏற்க மறுத்தனர். இந்த நிலையில், நீதிமன்றம் அமைத்த 4 உறுப்பினர்களின் ஒருவரான புபீந்தர் சிங் மான், குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து, ஷேத்காரி சங்கதனா என்ற விவசாய அமைப்பின் தலைவர் அனில் கன்வத், வேளாண் பொருளாதார நிபுணர்கள் அசோக் குலாட்டி, பிரமோத் குமார் ஜோஷி ஆகியோர் கொண்ட 3 பேர் குழு, விவசாய சட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தி வந்தது.

இந்த குழுவினர் விவசாயிகள், விவசாய நிபுணர்கள், மத்தியஅரசு  அதிகாரிகள் என பலதரப்பினரைலயும் சந்தித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து வந்தனர். அதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து தனது பணியை முடித்த குழுவினர், இன்று,  ஆய்வறிக்கையினை சீலிட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்தது.

இதில் வேளாண் சட்டங்களில் இருக்கக்கூடிய நிறைகுறைகள்  சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதாகவும், அதனை தீர்க்க வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

More articles

Latest article