டில்லி:

மோடி அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி, “புதிய பாட்டிலில் பழைய ஒயின்” என்று விமர்சித்து உள்ளார். பேசுவது புதிய இந்தியாவை பற்றி.. ஆனால் வாக்குறுதிகள் எல்லாமே பழசு: என்று குற்றம் சாட்டி உள்ளார்.

17வது லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை தொடர்ந்து,  பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. அதைத்தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீத்தாராமன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மக்களவையில்  2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். சுமார் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் அவர் பட்ஜெட்டை வாசித்தார்.

இந்த பட்ஜெட்டில், பல வரிகளும், சில வரிச்சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும், நாட்டின் வேலைவாய்ப்புக்கு எந்தவித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. இது குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

அதிர் ரஞ்சன் சவுத்திரி – காங்கிரஸ்

இந்த நிலையில்,  நிதிநிலை அறிக்கையை குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது,  பட்ஜெட்,  “புதிய பாட்டிலில் பழைய ஒயின்” என்று குறிப்பிட்டார். பட்ஜெட்டில் எதுவும் புதிதல்ல என்று கூறினார். பழைய விஷயங்கள் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு உள்ளன. புதிய இந்தியாவை பற்றி பேசுபவர்கள் அளித்த வாக்குறுதிகள் எல்லாமே பழசாக இருக்கிறது. புதிதாக எதுவும் இல்லை, வேலைவாய்ப்பு உருவாக்க எந்த திட்டமும் இல்லை, புதிய முயற்சிகளும் இல்லை”  என குற்றம் சாட்டினார்.