சென்னை :

யுஷ் அமைச்சகம் சார்பில் இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் கலந்து கொண்ட இணையதளப் பயிற்சிக் கூட்டம் ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 20 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த 37 மருத்துவர்கள் உட்பட மொத்தம் 400 மருத்துவர்கள் இந்த பயிற்சிக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொட்டெச்சா இந்தியில் உரையாற்றினார், இது தங்களுக்குப் புரியவில்லை என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறினர், மேலும் ஆங்கிலத்தில் பேசவும் அவருக்குக் கோரிக்கைவைத்தனர்.

மருத்துவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த ராஜேஷ் கொட்டெச்சா, இந்தி புரியாதவர்கள் இந்த கூட்டத்தில் இருந்து வெளியேறலாம் என்று கூறினார், அதோடு, தனக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வராது என்றும் தன்னை ஆங்கிலத்தில் பேசச்சொல்லி வற்புறுத்திய மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்தார்.

அவரின் இந்த மிரட்டல் மருத்துவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய அதேவேளையில், அவர் பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, மேலும் ராஜேஷ் கொட்டெச்சா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இணையதளம் வாயிலாகக் கலந்து கொண்ட ஒரு சர்வதேச கருத்தரங்கில் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இந்தி தெரியாத குறிப்பாக தமிழக மக்களை அவமதிக்கும் விதமாக மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து செயல்படுவதையே காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், திருக்குறளை அனைவரும் படிக்கவேண்டும் என்று வலியுறுத்திவரும் பிரதமர் மோடி, தனது அரசின் கீழ் செயல்படும் அதிகாரிகளுக்கு திருக்குறளைப் பயிற்றுவிக்கத் தேவையான முன் முயற்சியை எடுப்பாரா என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் கனிமொழி எம்.பி.

மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது.இது கண்டிக்கத்தக்கது.மத்திய அரசு, உடனடியாக அந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்க படுவதை, பொறுத்துக்கொள்ளப் போகிறோம் ? என்று கேள்வியெழுப்பி இருக்கிறார்.