டெல்லி: நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாக புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதில், மாணவர்கள் பள்ளிக்கு வர பெற்றோரின் ஒப்புதல் தேவையா? என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல்  ஏறி இறங்கி வருகிறது.  மத்தியஅரசு நேற்று வெளியிட்ட தகவலில் தொற்று பரவல் குறைந்திருந்த நிலையில், இன்றைய பதிவில் அதிகரித்து உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால், கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளும் தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் பள்ளிகள் திறப்பு தொடர்பாக புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதில், பள்ளிகளுக்கு குழந்தைகள் நேரடியாக வருவது தொடர்பாக பெற்றோரின் ஒப்புதல் தேவையா? என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும்,

பள்ளிக்கு வர மாணாவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது.  ஆன்லைன் வகுப்புகளையும் தொடரலாம். இருந்தாலும் ஆன்லைன் படிப்பில்  இருந்து நேரடி வகுப்புக்கு மாறுதலின் போது மாணவர்களின் சிரமத்தை போக்க இணைப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும், மாணவர்களின் நலனின் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ,  மாணவர்களுக்கு உரிய உதவியை கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

ஒவ்வொரு மாணவரும் பாடத்திட்டத்தில் உள்ள புத்தகங்களைப் படிப்பதை உறுதிசெய்தல், மற்றும் தீர்வுத் திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துஉள்ளது.