ராமநாதபுரம்: ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தாவிட்டால் அபராத வட்டி விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கியுள்ள ஊராட்சியின் நிதியின் மூலம் அந்த பகுதியில் எந்த அளவிற்கு பணிகள் செயல்படுத்தப் பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் ராமநாதபுரத்திற்கு வருகை தந்தார். அங்கு அதிகாரிகளுடன், மத்திய அரசின் திட்டங்கள் அதை செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து விசாரணை நடத்தினார். மேலும் பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், ராமநாதபுரம் மாவட்டத்தில், மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து அதிகாரிகள், பயனாளிகளிடம் கேட்டறிந்தோம். ஒவ்வொரு நிதி ஆண்டும், பஞ்சாயத்துராஜ் துறைக்கு பல லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அவற்றை பெறுவதற்குரிய தணிக்கை ஆவணங்களை, மாநில அரசுகள் சமர்ப்பிக்காமல் உள்ளதால் தாமதம் ஏற்படுகிறது. இந்த பிரச்னை ராமநாதபுரத்திலும் உள்ளது.
இதுதொடர்பாக கூடுதல் ஆட்சியரிடம் விசாரித்து, விரைவில் ஆவணங்களை சமர்பிக்க கூறியுள்ளேன். ஊராட்சிகளுக்குரிய நிதி ஒதுக்கிய, 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், மாநில நிதியில் அபராத வட்டி செலுத்தி, அதையும் ஊராட்சிக்கு பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் இதுவரை அதுபோல எந்தவொரு நிகழ்வுகளும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.